கழுகு வானத்தில் பறந்தால் நிலத்திலுள்ள தாய்க்கோழியானது தன் குஞ்சுகளை இறக்கைக்குள் போட்டுக்கோள்ளும். கோழியைக் கூடைக்குள் போட்டுவிட்டாலும் அதிகாலை சரியாக மூன்று மணிக்குக் கூவும். அதற்கு எவ்வாறு மணி தெரிகின்றது?
கோழி சிலம்ப சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
ஏழில் இயம்ப – ஏழு என்பது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் என்ற ஏழு ஆதாரங்களைக் குறிக்கின்றது. இயம்பும் வெண்சங்கு எங்கும் - சஹஸ்ராரம் என்ற உச்சி, ஆக்கினை பிறக்கும் இடம், ஆக்கினை கொடுக்கும் இடம். ஆக்கினையை நடைமுறைப்படுத்தும் ஆதாரம் ஆக்ஞா என்ற நெற்றிக்கண்ணாகும். சந்தேகம் வரும்பொழுது நெற்றி என்ற புருவமத்தியை சுருக்கி யோசிக்கின்றோம். புருவமத்தியைப் பயன்படுத்தாமல் யாரும் வாழ முடியாது. கோயிலில் தங்கத்தாலேயே சிலை வைத்தாலும், மக்களெல்லாம் கூடி அதற்கு ஒரு சாஸ்திரிகளை வைத்து அதன் நெற்றியில் ஒரு வெள்ளி அல்லது தங்கப்பணத்தை வைத்தபின் சிலை செய்தவரே கும்பிடுகிறார்.
உலக அறிவின் செல்வங்களாக வாழ்ந்தும்கூட, நாம் எதை விரும்புகின்றோம் என்பதை நன்றாக அறிந்தும்கூட, அந்நிலையில் நம்மால் ஏன் நிற்க முடியவில்லை? கையை வெளியில் ஏந்தி ஏந்தியே பழகியுள்ளோம். ஆழ்ந்த நித்திரையில் அனுபவித்த சுகானாந்தத்தை நாம் புறமாக, வெளியில் தேடித் திரிகின்றோம். வாழ்வின் நோக்கத்தைத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் அரிய மானிடப் பிறவியை விழலாகக் கழிப்போமா? ஸ்பரிசம், சுவை, நாற்றம், கேள்வி, பார்வை என்ற உணர்ச்சிகள் இந்த ஜட உடலுக்குத் தெரியுமா? இவ்வகையான விளக்கங்களைத் தெரிவித்தவர்களும் தெரியக் காரணமாய் இருந்தவர்களும், இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய தொண்டர்கள் என்னைப் போன்றோர் ஆயிரமாயிரம் பேர்கள் இருந்தாலும்கூட மக்கள் அனைவருமே வெளியில் ஏந்துகின்றனர்.
எளிமையில் கிடைக்காத ஒரு பொருளுக்காக ஆசைப்படுகின்றோம். மந்திரியைச் சந்தித்து அவருடைய பரிந்துரையின் பெயரில் அந்தப் பொருள் நம் கைவசம் கிடைத்தால் நாம் அடையக்கூடிய மகிழ்ச்சிக்கு அளவு இருப்பதில்லை. அந்தப் பொருளைப் பற்றி இனி நம் சிந்தனைக்கும் செயலுக்கும் வேலை இல்லை என்பதே அந்த அளவற்ற மகிழ்ச்சிக்குக் காரணமாகும். அந்த ஒரு நொடி மகிழ்ச்சியைத்தானே நாம் எல்லோரும் விரும்புகிறோம்! இது தெரிந்திருந்தும் வெளியில் கையேந்துவது ஏன்?
ஒரு எறும்பைத் தனியாகப் பார்க்க முடியாது. எறும்புகளிடம் இருக்கக்கூடிய இனஒற்றுமை மனிதனிடம் இல்லையே. மனிதர்கள் தனித்தனியாகத்தானே இருக்கிறார்கள். அவருக்கு வந்தால் என்ன, உனக்கு வந்தால் என்ன? நான் நன்றாய் இருந்தால் போதும் என்ற சுயநலம் மிகுந்துள்ளதே. மனித இன ஒற்றுமை அறவே இல்லையே. இதையெல்லாம் பெரியோர்கள் பல்லாற்றாலாலும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.
உலக அறிவின் செல்வங்களே! இன்றிலிருந்து வையத்துள் வாழ்வாங்கு வாழுங்கள். மொட்டை அடிக்க வேண்டாம், தாடி வளர்க்க வேண்டாம். எந்தவொரு அடையாளமும் காட்டிக்கொள்ள வேண்டாம். சாதாரண மனிதனாக இருந்துகொண்டு சொன்னால் கொஞ்சமாவது மக்கள் செவி சாய்ப்பார்கள். வேடங்கள் தரித்தால், ‘அடேங்கப்பா! இவர்கள் கூறுவது நமக்கு ஒத்து வராது, சாமியார்களுக்குத்தான் பொருந்தும், நமக்கு ஏன் வம்பு!’ என்று காதை எதிர்பக்கம் திருப்பிக் கொள்வார்கள். ஆகவே, வாழ்க்கையின் நோக்கத்தை அறிவிக்கக்கூடிய ஒரு தொண்டன் இருக்கக்கூடிய காலத்தில் நீங்கள் அவனைப் பயன்படுத்தாது போனால், மீண்டும் அப்பேர்ப்பட்ட தொண்டன் பிறக்கும்போது நீங்கள் எங்கேயோ! இதனையேதான் மகான் அவர்கள் கண்ணீர்விட்டுச் சொன்னார்கள். ‘ஒரு அறிவாளி இருந்து மக்களை வாழ்விக்கக்கூடிய முறையைச் சொல்லும்போது அவனைப் பயன்படுத்தத் தெரியாதவன் மீண்டும் அத்தகைய அறிவாளி பிறக்கும் பொழுது இவன் எங்கேயோ!’ காலாகாலத்தில் தோன்றும் சூரியப் பிரகாசத்தைப் போல் அறிவாளிகள் தோன்றி, வாழ்ந்திருக்கும்போது, அவர்களை அண்டி வாழ்வின் நோக்கத்தினைத் தெரிந்து கொள்ளாது போனால், மீண்டும் மீண்டும் ஜனனம் மரணம், ஜனனம் மரணம் என்று ஜனத்தொகை பெருகிக்கொண்டே போனால் ரேஷனுக்கும் போதாது. பலவிதங்களிலும் தொந்தரவுதானே நிலவும்.
ஒரு எறும்பையோ யானையையோ தனியாகப் பார்க்க முடியாது. Forest Ranger, ‘ஒற்றை யானையைப் பார்த்தால் ஓடிவிடுங்கள்’ என்றுதான் சொல்லி அனுப்புவார்கள். இதன் பொருள் மதம் பிடித்த யானைதான் தனியாக வரும் என்பதாகும்.
கொம்புளதற்கு ஐந்து முழம்
குதிரைக்குப் பத்து முழம்
வெம்பு கரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே
என்று உதாரணங்களை எடுத்துக்காட்டி வாழ்வின் லட்சியத்தை எடுத்துக்கூறி தன்னுடைய சுவாசத்தையும் நாடி நரம்புகளையும் மக்களின் சேவைக்காகவே பயன்படுத்தக்கூடிய ஒரு ஜீவன் (ஆச்சாரியன்) இருந்தும்கூட அவன் சொல்லைக் கேட்கவும் நேரமில்லை. அனைத்தும் வெளியே இருக்கும்பொழுது இவன் (ஆச்சாரியன்) உள்ளே போகச் சொல்கிறானே, இவன் கூறுவது சாமியார்களுக்குதான் ஆகும், நமக்கு ஆகாது என்றே எண்ணி எண்ணி ஏமாறுகிறீர்கள்.
ஆழ்ந்த நித்திரையில் அருகில் கணவனும் இல்லை, மனைவியும் இல்லை, பெற்ற பிள்ளைகளும் இல்லை, Bank balance இல்லை, கொடுக்க வேண்டியதும் இல்லை, கொடுத்த ஞாபகமும் இல்லை. அந்த ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் சுகத்திற்கு ஒப்புவமை கொடுக்கவும் முடியாது.Is there any comparison for that stillness? எனவே, வையத்துள் வாழுங்கள், வாழ்வாங்கு வாழுங்கள். அப்படி வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்பவனை அண்டி, கேட்டுக் கொண்டு, மீண்டும் பிறவிக்கு வராமல், ஜனத்தொகையை ஏற்றாமல் இருப்பதற்கு ஒரு காரணமாய் இருங்கள்.
இருள் இல்லா இடம் இல்லை, இருள் இல்லா காலமும் இல்லை. இருள் இல்லையேல் ஏதும் நடைமுறைக்கு வர இறைவனின் செயலால் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. எப்படி நம்புவது? இப்போது, நான் பேசும் சப்தம் உங்கள் செவிப்பறையில் மோதுகிறது. எது சப்தத்தைக் கடத்தியது? Which is the conducting device? பரமாணுக்களின் (particles) வியாபகம் ஏகமும் உள்ளது. அவற்றின் அதிர்வலைகள்தான் உங்கள் காதுகளில் மோதுகிறது. ஒவ்வொரு பரமாணுவிலும் (particle) ஒவ்வொரு கருத்து இருக்கின்றது. இதை விஞ்ஞானமும் கண்டுபிடித்துள்ளது. ஹைட்ரஜன் அணுவும் ஆக்ஸிஜன் அணுவும் (H2+O2) சேரும்பொழுது தண்ணீராக வேண்டும் என்ற கருத்து அவ்வணுக்களுள் இருக்கின்றது. அந்தக் கருத்தை வைத்தவன் யார்? செயல்படுத்தியவன் யார்? Who is the programmer? Who is the performer? That is beyond our knowledge. THAT THOU ART. அதுவே உங்கள் இதயத்துடிப்பிற்குக் (Heart beating) காரணம். அதுவே நுரையீரல்களின் (Lungs) செயல்பாட்டிற்குக் (activation) காரணம். இவையனைத்தும் உங்களுக்கு மட்டுமா நடைபெறுகின்றன? கோடானு கோடி உயிர்களின் காரணப் பொருளாகவும் காரியப் பொளாகவும் எது இருக்கிறதோ அதைத்தான் தியானம் செய்யக் கற்றுக் கொடுக்கின்றோம்.
எந்த நேரமாயிருந்தாலும், சிந்தனை செய்யும்போது, How to solve this? இருபுருவநடுவை சுருக்காமல் சிந்திக்கிறோமா?இந்த இடத்தைப் (இருபுருவநடு) பயன்படுத்தாதவர் யாரேனும் இருக்க முடியுமா? முடியவே முடியாது. உலகங்களையெல்லாம் ஆளக்கூடிய அரசனின் சிம்மாசனம், உலகங்களையெல்லாம் நிர்வகித்த போதும், அது உன்னிடம், உனக்குச் சொந்தமாக, மெய்யுணர்வாக இருபுருவநடுவில் அமைந்திருக்கிறது. ‘அவனைப்’ பயன்படுத்துங்கள். காலங்களைக் கடந்து சொல்வான். நிகழ்காலத்தையும் சொல்வான். எதிர்காலத்தையும் சொல்வான். கடந்த காலத்தையும் நினைவுபடுத்தி, செய்த குற்றங்களையும் சொல்வான்.
குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு,
குருர் தேவோ மஹேச்வர
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம
இந்த அளவில் குருவை எவன் நம்புகிறானோ, அவன் சரிசமமாக குருவாகவே மாறுகின்றான். எப்படி? பாலை சூடுசெய்து ஆறிய பிறகு சிறிது தயிர் ஊற்றினால் அந்த முழுப்பாலும் திடமான தயிர் ஆகின்றது. எனவே, எதெது நடக்க வேண்டுமோ அது ஏற்கனவே பதிவாகி இருக்கின்றது.
எனவே, வாழ்வின் இரகசியத்தை அறிந்த உலக அறிவாளிகளே! உங்களையெல்லாம் தட்டி எழுப்பி, வாழ்வின் நோக்கத்தை what is the aim of the life என்பதை போதிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளோம். கூலிக்காரர்கள்போல் இருக்கின்றோம். ஆம்! உங்களுடைய விசுவாசம் எனக்குக் கூலி. இதற்காக உழைப்பவன், இந்த உடல் உள்ளம் நா கண் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி உழைக்கக்கூடியவன் நான். வயது 90ஐ தாண்டிக் கொண்டிருந்தாலும், இந்தக் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்.