1. ஆலயங்களில் உள்ள கொடி மரத்தின் தத்துவத்தினை விளக்கவும், சுவாமி?
கொடிமரம் பூமியை ஆதாரமாகக் கொண்டு ஆகாயத்தை நோக்கி நிற்கும். அதன் உச்சியில் மூன்று இணைப்புகள் இருக்கும். அடிப்பாகத்திலிருந்து ஒரு சிறு கயிறு சுழன்று கம்பத்தின் உச்சியினை அடைந்திருக்கும். இக்கருத்தினை போதித்த பிறகுதான் பரமாத்ம சொரூபம் பற்றி உபதேசம் வழங்கப்படும். இதனை விளக்குவதுதான் கொடி மரத்தினை தரிசித்த பிறகு ஆராதனை செய்வதன் நோக்கமாகும். கொடிமரம் என்பது முதுகந்தண்டு. இதன் அடிபாகத்தில்தான் “குண்டலினி” என்ற பரமாத்ம சொரூபம் இருக்கின்றது. இங்கிருந்துதான் இடகலை பிங்களை என்ற இருநாடிகளும் அதற்காதாரமான குருநாடி என்ற சுழிமுனை நாடியும் முதுகந்தண்டின் உள்வழியாக மேல் நோக்கிச் செல்கின்றன. இதனை அறிவிப்பதே கொடிக் கம்பத்திலுள்ள கயிறு. கம்பத்தின் உச்சியில் மூன்று இணைப்புகள் இருக்கும். அவைகள் உச்சிக்கண், நெற்றிக்கண், பிடரிக்கண் என்ற மூன்றேயாகும்.
இந்த முதுகந்தண்டு தேகத்தினை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றது. தேகம் பிருதிவியின் சொரூபம், அதாவது மண். இந்த மண் என்ற பிருதிவியை ஆதாரமாகக் கொண்டு நிற்கும் முதுகந்தண்டினை அறிவிப்பதற்காகத்தான் மண் என்ற பூமியில் இந்தக் கொடிக் கம்பத்தை ஸ்தாபித்துள்ளனர்.
2 ஆலய வழிபாட்டிற்குச் செல்பவர்கள் மட்டை நீக்கிய தேங்காயும் பழமும் சூடமும் வாங்கிக்கொண்டு போகவேண்டுமென்பதன் கருத்து என்ன சுவாமி?
சாதகன் தனது மனதினைப் பற்பலவிதமான சிக்கல்கள் நிறைந்ததாகக் கொண்டிருப்பானேயானால் அவனது புத்தி குருவின் உபதேசத்தினை கிரஹிக்க முடியாது. ஆதலால் சாதகனின் புத்தியினை முதற்கண் தூய்மைப்படுத்துதல் வேண்டும். புத்தியானது தூய்மையாக இருந்தால்தான் போதனைகள் பசுமரத்தாணிபோல் கிரஹிக்கப்படும். புத்தியின்கண் சூழ்ந்துள்ள மனதின் சிக்கல்களை நீக்குவதுதான் தேங்காயின் நார்களை சுத்தம் செய்வதாகும்.
கடவுளை தரிசிக்க விரும்பும் சாதகன் தன்னிடம் இருக்கும் உலக ஆசைகள் என்ற சிக்கல்களைக் களைந்துவிட வேண்டும். அப்போதுதான் அவனது உள்ளம் தெளிந்த குளத்தினைப் போன்ற சலனமற்றிருக்கும். இம்மாதிரி தெளிந்த நல்ல உள்ளத்தினில் கடவுளின் அருட்பெருஞ்ஜோதி இலகுவில் பிரதிபலிக்கும். உலக ஆசைகளின் சிக்கல்களைக் அளவிட்டுக் கூற முடியாது. அதுபோன்றே தேங்காயின் மட்டையிலுள்ள நார்களையும் அளவிட்டுக் கூறமுடியாது. தேங்காயின் உட்புறம் இருக்கும் வெண்மை நிறமும் தெளிந்த நீரும் போல சாதகனானவன் மனத்தூய்மை பெற்றவனாக இருப்பானேயானால் அவனது உள்ளத்தில் குருமகானின் போதனைகள் மிகமிகத் தெளிவாகப் பதிந்து அவனை தியானப் பயிற்சியில் முன்னேற்றமடையச் செய்வது திண்ணம். இந்த அரிய கருத்தினை போதிப்பதுதான் மட்டை நீக்கிய தேங்காயினை ஆலய வழிபாட்டிற்குக் கொண்டு செல்வதாகும்.
3 தேங்காயிலுள்ள மூன்று கண்கள் எதையேனும் கருத்தை உணர்த்துகின்றதா சுவாமி?
தேங்காய் மூடியின்கீழ்ப்பாகத்தில் மூன்று கண்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அம்மூன்று கண்களில் ஒரு கண்ணினை எளிதாகத் துளைத்துவிட முடியும். ஆனால் மற்ற இருகண்களை எளிதில் துளைக்க இயலாது. இதன் கருத்து யாது? சாதகன் என்ற மனிதனின் முடியின் கீழ்ப்பாகத்தில் பார்வைக்குரிய இரண்டு கண்கள் இருக்கின்றன. இருபுருவ மத்தியிலுள்ள ஊசிமுனை மிக மெல்லிய சவ்வினால் மூடப்பட்டுள்ளது. இந்தக் கண்ணினை நெற்றிக்கண் என்றும் ஞானக்கண் என்றும் ஆக்ஞா ஸ்தானம் என்றும் ஊசிமுனை வாசலென்றும் இன்னும் அநேகமநேகத் திருநாமங்களில் அழைப்பர். இக்கண் திறவாதபடி யாரும் கடவுளைக் காண்பதோ, தன்னிலை அடைவதோ, முக்தி பெறுவதோ முடியவே முடியாது.
இக்கண்ணானது அணுவிலும் சிறியதாக இருப்பினும் இதுவே இந்த உலகங்களையெல்லாம் ஆளும் அரச சிம்மாசனமாகும். இக்கண் ஞானாசிரியனால் திறக்கப்படுமானால் சாதகனின் மனமானது மிகத்தூய்மையாகக் காணப்படும். மனதின் தூய்மையினைக் குறிப்பதுதான் தேங்காயின் உட்புறம் உள்ள வெண்மையான பகுதியாகும்.
7. தீபாராதனை முடிந்த பிறகு அர்ச்சகர் தேங்காயின் ஒரு பாகத்தினை, பழங்களின் ஒரு பாகத்தினையும் எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றைக் கொடுக்கும் கருத்து என்ன சுவாமி?
இதன் கருத்து யாதெனில், சாதகனின் தூய்மைப்படுத்தப்பட்ட மனத்தினை குருமகானிடம் அர்ப்பணம் செய்துவிடவேண்டும். அவ்வாறு அர்ப்பணம் செய்துவிட்ட மனதின் ஒரு பகுதியை தனது வாழ்விற்காக தன்னிடம் வைத்துக்கொள்ளலாம் என்ற கருத்துதான் தேங்காயின் ஒரு பாதியினை அர்ச்சகருக்குக் கொடுப்பது ஆகும். பழம் இனிமையான ருசியுடையது. அதே போல உலக வாழ்வின் ருசிகளை குருவினிடம் சமர்ப்பித்துவிட்டு வாழ்வின் இன்றியமையாத தேவைகளை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தினை போதிப்பதே பழங்களை அர்ச்சகருக்குக் கொடுப்பதாகும்.
4. ஆலயம் என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும் சுவாமி?
தேகம் என்பதுதான் ஆலயம். பூவுலகில் மண்ணால் கட்டப்பட்டிருப்பதும் ஆலயம். பல பிரகாரங்களை உடையதும் கல்மண்ணால் கட்டப்பட்டதும் ஆலயமாகும். அதுபோன்று எலும்பு, தசை, மஜ்ஜை, மாமிசங்களால் அமைக்கப்பட்டதே ஊனுடம்பு என்ற ஆலயம். சாதகனாகப்பட்டவன் தியானத்தின் பயனாக ஊனுடம்பு என்ற ஆலயத்திலுள்ள அன்னமய கோசம் முதலான பிரகாரங்களைக் கடந்து ‘நான்’ என்ற கடவுள் தரிசனம் பெறுகிறான். இவ்வரிய கருத்தினைப் போதிப்பதே கல்மண்ணால் கட்டப்பட்ட ஆலயமாகும்.
5. ஆலயத்தில் எழுப்பப்பட்ட ஏழு பிரகாரங்களின் கருத்தென்ன?
ஏழு பிரகாரங்களாவன பஞ்ச கோசங்களாகிய எலும்பு, தசை, மஜ்ஜை, மாமிசத்தாலான அன்னமய கோசம், ஆசை வடிவங்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ள மனோமய கோசம், ஜீவனின் கருவாக இருப்பதும், குணாகுணங்களாலானதுமான பிராணமய கோசம், மனிதனின் ஆராய்ச்சி நிலையான விஞ்ஞானமய கோசம், சலனமற்ற நிலையில் தன்னுடைய இருப்பு நிலையில் “நான் இருக்கிறேன்” என்ற நினைவு கலந்த துணிவுமயகோசம், நினைவுமயகோசம், எனது அறிவு என்ற ஏழாம் கோசம் ஆகியனவாகும்.
6 கர்ப்பக்கிரகத்தில் இருள் சூழ்ந்திருக்கும் காரணம் என்ன சுவாமி?
கர்ப்பக்கிரகம் என்ற மூலஸ்தானத்தினை சென்றடையும் போது, அந்தக் கருவறையினுள் சூழ்ந்துள்ளது இருள். இருளில் இருப்பது லிங்க சொரூபம். அர்ச்சகரின் தூப தீப ஒளியினால் காணப்பெறுவது லிங்க சொரூபமாயுள்ள பரமாத்மா. சாதகனானவன் ஏழு பிரகாரங்களைக் கடந்து ஆண்டவனின் தரிசனத்திற்குப் பதிலாக இருளைக் காண்கிறான். கருவறை லிங்கத்தினை தரிசனப்படுத்துவதற்கு எப்படி ஒரு அர்ச்சகர் தேவையோ, நமது தேகம் என்ற ஆலயத்தின் கோசங்களையெல்லாம் கடந்து “உள்ளம்” என்ற பெரும் கோயிலினை தரிசனப்படுத்தி அதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் காரணபுருஷராகிய பரமாத்மாவினை தரிசனப்படுத்த ஒரு ஞானாசிரியர் தேவை.
7. ஆலய வழிபாடு என்ற பக்தி யோகம் போதிக்கப்பட்டதன் பயன் என்ன சுவாமி?
இறைவன் என்று ஒருவன் உண்டு. அவன் எல்லாம்வல்ல பெருமான். அவனை பக்தியுடன் வணங்கி வழிபட வேண்டும். புண்ணியக் கர்மங்களைச் செய்தால் இறைவன் மகிழ்கின்றான். பாப கர்மங்களைச் செய்தால் இறைவன் கோபப்படுகிறான். இறைவனின் மகிழ்ச்சியால் மக்கள் ஆனந்தமான, வளமான வாழ்வு பெறலாம். இறைவனின் கோபத்திற்காளானால் மக்கள் கூன், குருடு, செவிடு போன்ற அங்கஹீனர்களாகப் பிறப்பர். அன்றியும் நோய் நொடி போன்ற பெரும் பிணிகளுக்கும் ஆளாவர். இக்கருத்தினை மக்களுக்குப் போதிப்பதே ஆலய வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.